தமிழில் மின்னூல் தயாரிப்பது எப்படி?

ஜூன் 5, 2008

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.காரணம்:

  • மின்நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது.
  • பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.
  • பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
  • பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

மிகவும் எளிமை தான். யான் இதைத்தான் 2 வருடங்களாக பயன்பத்தி வருகிறேன்.

தேவை:
சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான மாற்றி ( PDF Converter ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.

மேலும்…..


தமிழ் இணைய உலகில் இ.கலப்பை - தமிழ்ஓசை செய்தி

ஜூன் 2, 2008

ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எந்தக் கணிப்பொறியிலும் தட்டச்சுச் செய்யலாம்.ஆனால் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு கணிப்பொறியில் தட்டச்சுச் செய்தால் அந்த எழுத்துகளை வேறொரு கணிப்பொறி படிக்காது.அவ்வாறு படிக்க முடியாததால் ஒருவர் உருவாக்கிய செய்தி மற்றவருக்குப் பயன்படாமல் இருந்தது.அனைத்து கணிப்பொறிகளும் புரிந்துகொண்டு படிக்கும்படியான ஒருங்கு குறி(யுனிகோடு) வடிவம் இருந்தால் நல்லது என்ற நிலையைத் தமிழ்க் கணிப்பொறி நுட்பம் அறிந்த வல்லுநர்கள் அறிந்தார்கள்.
மலேசிய கடைத் தெருக்களில் இருந்த இணைய உலவி நடுவங்களுக்குச் சென்ற கணிப்பொறி வல்லுநர் சீனமொழிக்காரர்கள் எந்த இடையூறும் இல்லாமல் அவர்களின் தாய்மொழியான சீனமொழியில் தட்டச்சுச் செய்தனர்.எழுத்துருச் சிக்கல் அவர்களுக்கு இல்லை.தமிழில் அவ்வாறு செய்யமுடியவில்லையே என அவர் உள்ளம் ஏங்கியது.தமிழர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தமிழ் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்ய வேண்டும் அதற்குரிய மென்பொருளை உருவாக்க வேண்டும் என அந்த உள்ளம் நினைத்தது. தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களின் ஒத்துழைப்பு,ஊக்க உரைகளால் ஒருங்குகுறி வடிவில் தட்டச்சிடும் ஒரு விசைப்பலகையை அந்த இளைய உள்ளம் கண்டுபிடித்தது.

தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி இலவசமாக வழங்கிய அந்த மென்பொருள்தான் இ.கலப்பை எனபதாகும்.இதனை இணையத்திலிருந்து இலவசமகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழில் நிலவி வந்த எழுத்துரு சிக்கலுக்குத் தீர்வு சொன்ன இந்த இ.கலப்பையை உருவாக்கியவர் இளைஞர் முகுந்தராசு அவர்கள்.இணைய உலகில் முகுந்த் என்று அறிமுகமான பெயர்.

மேலும் தொடர…..


வேர்ட்பிரஸ் - தமிழில் பின்னூட்டத்தினை உள்ளிடுதல்

மே 25, 2008

பின்னூட்டங்களில் தென்படும் பெயர்களுக்குரியவர்கள் பெரும்பாலும் இன்னொரு சக பதிவராகவே இருக்கின்றார். பதிவரல்லாத தனியே வலைப்பதிவு வாசகர்களிடமிருந்து வெளிவரும் மறுமொழிகள் ஒப்பீட்டு அளவில் குறைவானதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். (அல்லது வலைப்பதிவுலகில் எழுதுபவர்களே படிப்பவர்களாயும் படிப்பவர்களே எழுதுபவர்களாயும் இருக்கிறார்கள் என்பது உண்மையகவும் இருக்கலாம்)

வலைப்பதிவொன்றைப் படிக்கும் பதிவரல்லாத வாசகர் ஒருவர் இடுகை குறித்த தன் கருத்தை இலகுவாகச் சொல்லி விட்டுப் போக பின்னூட்டப் பெட்டிகளிலேயே இணைக்கப்பட்டிருக்கும் தமிழில் உள்ளிடும் முறைகள் உதவக் கூடும். அவ்வாறான ஒரு முறையை எனது பின்னூட்டப் பெட்டியிலும் இணைத்துள்ளேன்.

பாமினி தமிங்கிலம் தமிழ் 99 முறைகளில் பயனர் தனது தெரிவினை அழுத்திய பின்னர் நேரடியாக யுனிகோடில் எழுதும் வாய்ப்பினை இது தருகிறது. ஏற்கனவே எனது பழைய புளொக்கரில் பயனில் இருந்த பாமினி தமிங்கில உள்ளிடும் முறைகளோடு தமிழ் 99 உள்ளிடும் முறையையும் சேர்த்திருக்கின்றேன்.

மேலும் தொடருங்கள்


கூகிள் இப்போது உங்கள் தமிழில்

மே 8, 2008

இணையதளம் இன்று நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உரையாடல்கள், மின் அஞ்சல் பரிமாற்றங்கள், நமது கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் விவரங்களைத் தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக நம்மில் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறோம்.

உங்களது நெருங்கிய கல்லூரித் தோழர் ஒருவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும்?

நீங்கள் நன்கு அறிந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த திரைப்படவிமர்சகராக இருப்பின், இணையத்தளத்தில் உங்கள் விமர்சனங்களை நீங்கள் ஏன் வெளியிடக்கூடாது? உங்களுக்குக் விவரங்கள் ஏதேனும் தேவைபடுகிறதா? அது சமையல் குறிப்புகள், தேர்தல் விவரங்கள் போன்ற எதுவாக இருப்பினும் ஒரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் இவ்வனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மேலும்……


கணினியில் தமிழ் தெரிவது எப்படி?

மார்ச் 31, 2008

ஒருங்குறி கணினியில் ஆங்கிலம் மட்டுமே இயங்கும் அல்லது கணினி ஆங்கிலத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். சும்மா உடான்ஸ் விடாதேய்யா என நினைக்கிறீர்களா? பொறுங்கள்.நீங்கள் நினைப்பது சரிதான். அப்படியானால், கணினி தமிழைப் புரிந்து கொள்ளுமா, சற்றுப் பொறுங்கள். கணினி தமிழ் மட்டுமல்ல எந்த மனித மொழியையும் புரிந்து கொள்ளாது. அதற்குப் புரியக் கூடிய ஒரே மொழி இலக்க மொழி (Machine Language) தான். இந்த மொழியில் இரண்டே இரண்டு குறியீடுகள் தான். அவை ஒன்று மற்றும் சுழி (பூஜ்யம்).

ஆனால் நாங்கள் ஆங்கிலத்தில் தானே கணினித் திரையில் பார்க்கிறோம். கட்டளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே இருக்கின்றன என்று தோன்றுகிறதா? அவை உங்களுக்கு ஆங்கிலத்தில் இருக்கின்றன ஆனால் கணினி அந்த ஒவ்வொரு கட்டளையையும் அது புரிந்துகொள்ளக் கூடிய இலக்க மொழியில் மாற்றப்பட்டு கணினியின் மூளையான செயலகம் (Processor) நிறைவேற்றுகிறது.

கணினி எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு இயங்குதளம் தரவுதளம் இயங்குகின்றன என்கிற நுணுக்கங்களுக்குச் செல்லாமல் திரையில் ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுத்துருவில் தெரிவது எப்படி என்று மட்டும் பார்ப்போம்.

கணினியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் விரும்பும்படி தான் ஆங்கில மொழியின் எழுத்துக்களைக் கூட பயன்படுத்திச் சேமிக்க வேண்டும். அதனால் ஒரு கணினி புரிந்து கொள்ளும் படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.

சரி ஆங்கிலம் தெரிவதே இப்படி இடியாப்பச் சிக்கல் என்றால் வேறு சில மொழிகள் இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் தெரிவது எப்படி?

ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை (Character Encoding) என்று அழைக்கிறோம்.  இதற்காகத் தான் இவ்வளவு மெனக்கிட வேண்டி இருக்கிறது.

நாம் இந்த குறியீட்டு முறையை பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களை கணிணிக்குள் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அதை நாம் கணினி திரையில் பார்க்க விரும்பும் பொழுது, சேமித்த எண்களையெல்லம் கூட்டி, கழித்து எழுத்துக்களாக மாற்றும் வேலையை யாராவது செய்ய வேண்டுமில்லையா? கவலையை விடுங்கள், கணிப்பொறி எழுத்துரு (Fontஎன்ற கோப்புச்செயலியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன எழுத்து வடிவம் என்பதை தேர்ந்தெடுத்து பிரதியிட்டுவிடும்.

ஆங்கில மொழிக்கு, தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்க நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக ஆஸ்கி - ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் அமெரிக்க தேசியத் தரநிர்ணயக் கழக முறை சுருக்கமாக ஆன்ஸி - Windows ANSI (American National Standards Institute) என்ற குறியீட்டு முறையை பயன்படுத்துகிறார்கள்.

தமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துருவும் பற்பல தன்னார்வலர்களின் படைப்புகளாகும். ஆளாளுக்கு ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எழுதி வந்தார்கள். இதனால் இவர் எழுதுவது அவருக்கும் அவர் எழுதுவது இவருக்கும் புரியாத நிலை ஏற்பட்டது.  விளைவு? தமிழில் ஒருவர் எழுதியது இன்னொருவருக்கு கிரேக்கம் இலத்தீன் போலத் தெரிந்தன.

இதனைச் சீர்செய்யும் முயற்சியில், புனேயில் உள்ள சி-டாக் - C-DAC (Centre for Development of Advanced Computing) என்ற இந்திய அரசு நிறுவனம் பல்வேறு கணினி நிபுணர்கள், விற்பன்னர்களின் துணையுடன் இந்திய மொழிகள் அனைத்திற்கும் பொதுவாக இந்திய நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக ‘இஸ்கி’ - ISCII (Indian Standard Code for Information Interchange) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.  இக்குறியீடு இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்கு பொதுமக்களிடம் போதுமான வரவேற்பைப் பெறாததால் தோல்வியடைந்தது. பெரும்பாலான இந்திய மொழிகளைத் தன்னுள் அடக்க வல்ல எளிதான ஒரு குறியீட்டு முறையை உருவாக்குவதில் ‘இஸ்கி’ ஓரளவுக்கு வெற்றி கண்டாலும் மக்கள் ‘அஸ்கு புஸ்கு’ என்று அதனை ஒதுக்கிவிட்டார்கள்.

பிறகு, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான தமிழ் நியமக் குறியீட்டு முறை அல்லது ‘திஸ்கி’ (TSCII - Tamil Standard Code for Information Interchange) குறியீட்டு முறையை அறிவித்தது.

நல்லவேளை, நாம் பிழைத்தோம். தற்போது ஒருங்குறி (Unicode) சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மொழிகள்  மட்டுமல்லாமல், உலக மொழிகள் அனைத்தையும்  தன்னகத்தே  கொண்டு உலா வருகிறது!  (நம்ப முடியவில்லையா?  இந்தக் கட்டுரையை எந்த தமிழ் எழுத்துருவும் (Tamil Font) நிறுவப்படாத, ஒருங்குறி வசதியுள்ள கணிணியில்  போட்டுப் படித்துப்பாருங்கள்!!) ஒருங்குறி தமிழ்க்கணிமையின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய பல்வேறு ஆர்வலர்களின் பங்களிப்பையும் நினைவு கூரவேண்டியது நம் கடமை.

ஆக்கம்: அபு ஷிஃபா

நன்றி:சத்தியமார்க்கம்.காம்